நாம் எப்படிப் பேச வேண்டும், எப்படிப் பேசக் கூடாது

 காலை நேர சிந்தனை

( 20.04.2024)


நாம் எப்படிப் பேச வேண்டும், எப்படிப் பேசக் கூடாது என ஆத்திசூடி கற்றுத் தருவதை நமது நினைவூட்டலுக்காகத் தொகுத்து வழங்கப் பட்டுள்ளது. 


1. ஔவியம் பேசேல்: 


ஒருவரிடமும் பொறாமைக் கொண்டு பேசாதே.


2. கண்டொன்று சொல்லேல்:


பார்க்காததைத் பார்த்தது போலப் பேசாதே. (பொய்ச் சாட்சி சொல்லாதே).


3. ஞயம்பட உரை: 


கேட்பவருக்கு இன்பம் உண்டாகும் படி இனிமையாகப் பேசு.


4. வஞ்சகம் பேசேல்: 


உண்மைக்குப் புறம்பான கவர்ச்சிகரமான சொற்களைப் பேசி ஏமாற்றாதே.


5. கோதாட்டு ஒழி: 


கபட நாடகம் ஆடுவதை நிறுத்து.


6. சித்திரம் பேசேல்: 


பொய்யான வார்த்தைகளை உண்மை போலப் பேசாதே.


7. சுளிக்கச் சொல்லேல்:


கேட்பவருக்குக் கோபமும் அருவெறுப்பும் உண்டாகும்படி பேசாதே.


8. சையெனத் திரியேல்:


பெரியோர்கள் "ச்சீ" என வெறுக்கும் படி வீணாய் பேசித் திரியாதே.


9. சொற்சோர்வு படேல்: 


பிறருடன் பேசும் பொழுது நம்பிக்கை இழக்கச் செய்யும் வார்த்தைகளைப் பேசாதே.


10. தெய்வம் இகழேல்: 


இறைவனை இகழ்ந்து பேசாதே.


11. நொய்ய உரையேல்: 


அற்பமான வார்த்தைகளைப் பேசாதே.


12. பழிப்பன பகரேல்: 


பொய், கடுஞ்சொல், பயனில்லாத சொற்களைப் பேசாதே.


13. பிழைபடச் சொல்லேல்: 


குற்றம் உண்டாகும்படி எதையும் பேசாதே.


14. மிகைபடச் சொல்லேல்:


சாதாரணமான விஷயத்தை உயர்ந்த வார்த்தைகளால் மிகைப் படுத்திப் பேசாதே.


15. மேன்மக்கள் சொற்கேள்:


நல்லொழுக்கம் உடைய சான்றோர்கள் சொல்வதைக் கேட்டு நட.


16. மொழிவது அறமொழி:


சொல்லுவதைச் சந்தேகமின்றி தெளிவாகத் திருத்தமுடன் பேசு.


17. வல்லமை பேசேல்: 


உன்னுடைய சாமர்த்தியத்தை நீயே புகழ்ந்து பெருமையாகப் பேசாதே.


18. வாதுமுற் கூறேல்: 


பெரியோர்கள் முன்பாக முரண் பட்டு வாதிடாதே.


19. வெட்டெனப் பேசேல்: 


யாருடனும் கத்தி வெட்டு போலக் கடினமாகப் பேசாதே.


20. ஓரஞ் சொல்லேல்: 


ஒரு சார்பாகப் பேசாமல் நடுநிலையுடன் பேசு.


இவற்றை மனதில் பதிய வைத்துக் கொள்ள வேண்டும். பேசும் போது நினைவு படுத்திக் கொள்ள வேண்டும். கவனமாகப் பேசுவது மிகவும் நல்லது.


┈❀🌿🀼󟽀┈❀🌿

Comments

Popular posts from this blog

பழங்களின் பெயர்கள் தமிழில்

சித்தர்களின் ரகசிய மந்திரங்கள்

தமிழ் ஆண்டு