நாலடியார்



நூல்: நாலடியார்
இயற்றியவர்: சமண முனிவர்கள்
அதிகாரம்: தாளாண்மை

பாடல்:

உறுபுலி ஊனிரை யின்றி ஒருநாள் 
சிறுதேரை பற்றியும் தின்னும்; - அறிவினால்
கால்தொழில் என்று கருதற்க கையினால்
மேல் தொழிலும் ஆங்கே மிகும். 

சொற்பொருள்:

உறுபுலி - வலிமை மிக்க புலி
ஊனிரை - மாமிச உணவு
சிறு தேரை - சிறிய தவளை
கால்தொழில் - சிறிய தொழில்
கருதற்க - எண்ண வேண்டாம்

பாடல்பொருள்:

வலிமை பொருந்திய புலியும் தனக்குரிய இறைச்சியுணவு ஒரு நாள் கிடைக்கவில்லையெனில் சிறிய தேரையைப் பிடித்துத் தின்னும், ஆதலால் அறிவினால் ஆராய்ந்து எந்தச் சிறிய தொழிலையும் அற்பமான தொழில் என்று எண்ணவேண்டாம். அந்த அற்பமான தொழிலும் ஒருவனது முயற்சியால் உயர்ந்த தொழிலாக மேம்படும்.

நூல்: நாலடியார்
ஆசிரியர் : சமண முனிவர்கள்
அதிகாரம் : செல்வம் நிலையாமை


நின்றன நின்றன நில்லா எனஉணர்ந்து
ஒன்றின ஒன்றின வல்லே செயின்செய்க;
சென்றன சென்றன வாழ்நாள் செறுத்துடன்
வந்தது வந்தது கூற்று.

சொற்பொருள்:

ஒன்றின - பொருந்துவன,
செறுத்துடன் - சினத்துடன்
கூற்று - எமன்

பாடல்பொருள் 

உலகில் நிலைபெற்றலை நிலைபெற்றவை என்று நினைக்கும் பொருள்கள் எல்லாமே, நிலையற்று ஒருநாள் அழிந்து போகும் என்று உணர்ந்து, உங்களால் செய்யக்கூடிய அறங்களைச் செய்ய நினைத்தால் விரைந்து செய்க! ஏனெனில் வாழ்நாட்கள் விரைந்து போய்க்கொண்டேயிருக்கின்றன. எமன் கோபித்து வந்துகொண்டே யிருக்கிறான்.


பாடல்

செல்வர்யாம் என்றுதாம் செல்வழி எண்ணாத
புல்லறி வாளர் பெருஞ்செல்வம் - அல்லில்
கருங்கொண்டல் வாய்திறந்த மின்னுப்போல் தோன்றி
மருங்கறக் கெட்டு விடும்

சொற்பொருள்:

செல்வழி - மறுமை
புல்லறிவாளர் - அறிவற்றோர்
அல்லில் - இரவில்
கருங்கொண்டல் - கருமேகம்
மின்னு - மின்னல்
மருங்கற - இருந்த இடம் தெரியாமல்

பாடல்பொருள்

நாம் செல்வம் உடையவர் என்ற கர்வம் கொண்டு மறுமையைப் பற்றி எண்ணாத அறிவற்றோரின் பெரும்செல்வம் எல்லாம், இரவில் கருமையான மேகம் வாய் திறப்பதால் உண்டாகும் மின்னலைப் போலத் தோன்றி இருந்த இடம் தெரியாமல் அழிந்துவிடும்.

நூல்: நாலடியார்
இயற்றியவர் : சமண முனிவர்கள்
அதிகாரம் : அறன் வலியுறுத்தல்

பாடல்: 

இன்றுகொல் அன்றுகொல் என்றுகொல் என்னாது
பின்றையே நின்றது கூற்றமென் றெண்ணி
ஒருவுமின் தீயவை ஒல்லும் வகையால்
மருவுமின் மாண்டார் அறம். 

சொற்பொருள்

பின்றையே - பின்னாலே
கூற்றம் - எமன்
ஒருவுமின் - விட்டு விடுங்கள்
ஒல்லும் - இயலும்
மருவுமின் - பற்றுங்கள், 
மாண்டார் - மாண்புடையார்
அறம் - நற்செயல்

பாடல்பொருள்!

இறப்பு இன்று வருமோ அன்று வருமோ என்று வருமோ என்று நினையாமல், எமன் பின் புறத்திலேயே நிற்கிறான் என எண்ணித் தீய செயல்களை விட்டு விடுங்கள். இயன்ற அளவு மாண்புடையார் போற்றிய நற்செயல்களைச் செய்யுங்கள்.

நூல்: நாலடியார்
இயற்றியவர்: சமண முனிவர்கள்
அதிகாரம்: பொறையுடைமை

பாடல்:

அறிவது அறிந்தடங்கி அஞ்சுவது அஞ்சி
உறுவது உலகுவப்பச் செய்து - பெறுவதனால்
இன்புற்று வாழும் இயல்பினார் எஞ்ஞான்றும்
துன்புற்று வாழ்தல் அரிது.

சொற்பொருள்:

உறுவது - செய்வது, இயல்வது
உலகுவப்ப - உலகம் மகிழ
எஞ்ஞான்றும் - எக்காலமும் 
அரிது - இல்லை

பாடல்பொருள்:

அறிய வேண்டிய நன்மை தீமைகளை அறிந்து, அடக்கமுடையவராகி, அஞ்ச வேண்டிய பழி பாவங்களுக்கு அஞ்சி, செய்வதை உலகம் மகிழுமாறு செய்து, அறநெறியில் வந்த பொருளால் மகிழ்ந்து வாழும் இயல்புடையவர் எக்காலத்தும் வாழ்வில் துன்பம் அடைவதில்லை.

நூல்: நாலடியார்
இயற்றியவர்: சமண முனிவர்கள்
அதிகாரம்: தாளாண்மை

பாடல்:

ஆடுகோடாகி அதரிடை நின்றதூஉம்
காழ்கொண்ட கண்ணே களிறணைக்கும் கந்தாகும்;
வாழ்தலும் அன்ன தகைத்தே ஒருவன்தான்
தாழ்வின்றித் தன்னைச் செயின். 

சொற்பொருள்:

ஆடுகோடு -அசையும் கொம்பு
அதர் - வழி
காழ் கொண்ட - நன்கு வேரூன்றி வலுவாக நின்ற பின்
களிறு - யானை
அன்ன தகைத்தே - அது போன்றதே

பாடல்பொருள்:

அசையும் கொம்பாகி, வழியில் நின்ற இளமரமும் நன்கு வேரூன்றி வயிரம் பாய்ந்த பெரிய மரமாக வளர்ந்த பின்னர், யானையைக் கட்டுகின்ற தறியாகும். அதுபோல, ஒருவன் தன்னைத் தாழ்ந்த நிலையில் நிறுத்தாமல் தொடர்ந்து முயற்சி செய்தால் அவனுடைய வாழ்வும் அப்படிப்பட்ட பெருமை மிக்கதாக மாறும்.



இன்று ஒரு இலக்கியச் செய்தி:

"வேளாண் வேதம்" என்று அழைக்கப்படும் நூல் எது? 

 விடை - நாலடியார்

நூல்: நாலடியார்
இயற்றியவர்: சமண முனிவர்கள்
அதிகாரம் : தாளாண்மை

பாடல்:

நல்ல குலமென்றும் தீய குலமென்றும்
சொல்லளவு அல்லால் பொருளில்லை; - தொல் சிறப்பின்
ஒண்பொருள் ஒன்றோ தவம்கல்வி ஆள்வினை
என்றிவற்றான் ஆகும் குலம். 

சொற்பொருள்!

தொல் - பழமை
ஒண் பொருள் - சிறப்பு மிக்க பொருள்
ஒன்றோ - ஒன்று மட்டுமா? 
ஆள்வினை - செய்யும் செயல், ( முயற்சி) 

பாடல்பொருள்:

நல்ல குலம்' என்றும் 'தீய குலம்' என்றும் சொலவதெல்லாம் வெறும் சொல்லளவே ஆகும். அப்படிச் சொல்வதில் ஒரு பொருளும் இல்லை. பழமையான சிறப்புமிக்க பொருள், தவம், கல்வி, செய்யும் செயல் என்னும் இந்த நான்கினால் மட்டுமே நல்ல குலம் அமைவதாகும்.

நூல்: நாலடியார்
இயற்றியவர் : சமண முனிவர்கள்
அதிகாரப்: இரவச்சம்

பாடல்:

திருத்தன்னை நீப்பினும் தெய்வம் செறினும்
உருத்த மனத்தோ டுயர்வுள்ளி னல்லால்
அருத்தம் செறிக்கும் அறிவிலார் பின்சென்
றெருத்திறைஞ்சி நில்லாதா மேல்.

சொற்பொருள்:

திரு - செல்வம்
நீப்பினும் - விலகினாலும்
செறினும் - வருத்தினாலும்
உருத்த - ஊக்கம் குறையாத
உயர்வுள்ளி - உயர்வை எண்ணி
அருத்தம் - செல்வம்
செறிக்கும் - மறைக்கும்
( இ) எருத்தி இறைஞ்சி - கெஞ்சிக் கேட்டு

பாடல்பொருள்:

செல்வம் தம்மை விட்டு விலகினாலும், தெய்வம் (ஊழ்வினை) சினந்து வருந்தினாலும், மேலோர் ஊக்கம் குன்றாமல் உயர் நெறி (தொழில் செய்து வாழும் வாழ்க்கை) கருதுவார்களே அல்லாமல், பொருளைப் புதைத்து வைத்துப் பாதுகாப்பவராகிய அற்பர் முன்னே சென்று, 'என்னிடம் ஒன்றும் இல்லை; ஏதேனும் தாருங்கள்' என்று கூறி நாணித் தலை குனிந்து நிற்க மாட்டார்கள்.

பதினெண்கீழ்க் கணக்கு நூல்களில் உள்ள ஒரே ஒரு தொகைநூல் எது?

விடை : நாலடியார்

த.முத்துபாண்டி
தமிழாசிரியர்
அரசுமேல்நிலைப்பள்ளி
பூதலாபுரம்
தூத்துக்குடி மாவட்டம்

Comments

Popular posts from this blog

பழங்களின் பெயர்கள் தமிழில்

சித்தர்களின் ரகசிய மந்திரங்கள்

தமிழ் ஆண்டு