நல்வழி
நூல்: நல்வழி
ஆசிரியர்: ஔவையார்
பாடல்: புண்ணியம் ஆம்....
பாடல்: 2
புண்ணியம் ஆம் பாவம் போம் போன நாள் செய்த அவை
மண்ணில் பிறந்தார்க்கு வைத்த பொருள்- எண்ணுங்கால்
ஈதொழிய வேறில்லை; எச்சமயத்தார் சொல்லும்
தீதொழிய நன்மை செயல்.
பொருள்:
மண்ணில் பிறந்தவர் வைத்திருக்கும் பொருள் எல்லாம் போன பிறவியில் செய்த புண்ணியம், பாவம் என்னும் இரண்டை.த் தவிர வேறு இல்லை என்று எல்லாச் சமயங்களும் சொல்கின்றன. எனவே தீமைகளை விலக்கித் தள்ளிவிட்டு நன்மை தரும் செயல்களைச் செய்வோம். அதனால் புண்ணியம் பெருகும். பாவம் போய்விடும். அடுத்த பிறவிக்கு முதலாக இருக்கும்.
நூல்: நல்வழி
ஆசிரியர்: ஔவையார்
பாடல்:26
பாடல்:
ஆன முதலில் அதிகம் செலவானால்
மானம் அழிந்து மதிகெட்டுப் – போனதிசை
எல்லார்க்கும் கள்ளனாய் ஏழ்பிறப்பும் தீயனாய்
நல்லார்க்கும் பொல்லனாம் நாடு
விளக்கம்:
ஒருவன் தன் வருமானத்தை விட அதிகம் செலவு செய்தால், அவன் கடன் வாங்கி தன் மானத்தை இழந்து, சொந்த புத்தியை இழந்து, போகும் திசை எல்லாம் அவனை எல்லாரும் திருடனைப்
போல் பாவித்து அவனிடம் பேசுவதையே தவிர்ப்பர், ஏழு பிறப்புக்கும் தீயவனாய், நல்லவர்களுக்கும் ஆகாதவனாய் மாறிவிடுவான். ஆதலால் வருமானத்திற்கு அதிகமாக செலவு செய்யக்கூடாது.
நூல்: நல்வழி
ஆசிரியர்: ஔவையார்
பாடல்: 28
பாடல்:
உண்பது நாழி உடுப்பது நான்குமுழம்
எண்பது கோடி நினைந்து எண்ணுவன – கண்புதைந்த
மாந்தர் குடிவாழ்க்கை மண்ணின் கலம்போலச்
சாந்துணையும் சஞ்சலமே தான்
விளக்கம்:
நாம் உண்பதற்குத் தேவை நாழி அரிசி சோறு தான். உடுக்க நான்கு முழம் துணி மட்டும். ஆனால் நாம் மனதில் நினைப்பது, ஆசைப்படுவது எல்லாம் எண்பது கோடி விஷயங்கள். மெய்ஞானம் என்ற அகக்கண் இல்லாமல், கிடைப்பதை வைத்துப் போதும் என்ற மனநிலை இல்லாமல் வாழும் மனிதர்களின் வாழ்க்கை "மண்கலம்" போல எப்போது உடையுமோ என்ற பயத்திலும் துன்பத்திலும் ( சாகும் வரை) நிம்மதியற்று இருக்கும்.
நூல்: நல்வழி
ஆசிரியர்: ஔவையார்
பாடல்: 29
பாடல்:
மரம்பழுத்தால் வௌவாலை வாவென்று கூவி
இரந்தழைப்பார் யாவருமங் கில்லை – சுரந்தமுதம்
கற்றா தரல்போல் கரவாது அளிப்பரேல்
உற்றார் உலகத் தவர்
சுரந்து அமுதம் - சுரக்கின்ற பால்
கற்றா - தாய்ப்பசு
கரவாது - மறைக்காது
விளக்கம்:
ஒரு மரம் பழுத்தால் அது பறவைகளையோ, மனிதர்களையோ கூவி அழைக்க வேண்டிய அவசியமில்லை. எல்வோரும் தானாக வந்து விடுவர். இவ்வாறு தாய்ப்பசு தன்னிடம் சுரக்கின்ற பாலைத் கன்றுக்குத் தருவதைப் போல, இல்லை என்று சொல்லாமல் கேட்பதெல்லாம் அள்ளிக் கொடுத்தால் உலகில் எல்லாரும் உறவினர் தான்.
(கொடுத்தால் மட்டுமே உறவுகள்)
நூல்: நல்வழி
ஆசிரியர்: ஔவையார்
பாடல்: 37
வினைப்பயனை வெல்வதற்கு வேதம் முதலாம்
அனைத்தாய நூலகத்தும் இல்லை - நினைப்பதெனக்
கண்ணுறுவது அல்லால் கவலைப் படேல் நெஞ்சேமெய்
விண்ணுறுவார்க் கில்லை விதி.
விளக்கம்!
வேதம் முதலான உலகின் அனைத்து நூல்களை ஆராய்ந்தாலும், செய்த வினையின் பயனை அனுபவிக்காமல் இருக்க வழி இல்லை என்பதே உண்மை. நெஞ்சே! நீ வினையை வெல்லும் வழியை எண்ணிக் கவலைப்பட்டுக்கொண்டிருக்கலாம். அவ்வளவுதான்.ஆனால் நற்செயல் புரிந்து விண்ணுலகம் செல்பவர்களை அவர்களின் தலைவிதி தடுத்து நிறுத்த முடியாது.
நூல்: நல்வழி
ஆசிரியர்:ஔவையார்
பாடல்: 38
நன்றென்றும் தீதென்றும் நானென்றும் தானென்றும்
அன்றென்றும் ஆமென்றும் ஆகாதே – நின்றநிலை
தானதாம் தத்துவமாம் சம்பறுத்தார் யாக்கைக்குப்
போனவா தேடும் பொருள்
விளக்கம்:
நல்லது இது என்றும், கெட்டது இது என்றும், இதைச் செய்தவன் நான் என்றும், அவன் என்றும், இது நடந்தது இன்று என்றும், அன்று என்றும் வாழ்க்கையில் நடைபெறும் விஷயங்களைப் பேதம் பிரித்துப் பார்க்காமல் இருக்கும் பற்று அற்ற நிலையே உண்மை நிலையாகும். கோரைப்புல்லை வெட்டி அதை கட்டுவதற்கு கோரைப்புல்லையே கயிறாகப் பயன்படுத்துவதை விட்டு விட்டு, வேறு கயிறு தேடும் மனிதரைப் போல, இறைவன் நம் உள்ளே இருக்கிறான், அவனே அனைத்திற்கும் காரணம் என்பதை உணராமல் இருப்பது சரியாகாது.
த.முத்துபாண்டி
தமிழாசிரியர்
அரசுமேல்நிலைப்பள்ளி
பூதலாபுரம்
தூத்துக்குடி மாவட்டம்
💐✨💐✨🌸🙏🏻🎊✨
Comments
Post a Comment