மூதுரை


நூல்: மூதுரை
ஆசிரியர்: ஔவையார்
பாடல்: நீரளவே ஆகுமாம்......

பாடல் : 7

நீரளவே ஆகுமாம் நீர் ஆம்பல்; தான் கற்ற
நூலளவே ஆகுமாம் நுண் அறிவு - மேலைத்
தவத்தளவே ஆகுமாம் தான் பெற்ற செல்வம்
குலத்தளவே ஆகும் குணம்

விளக்கம்:

நீரின் அளவு எவ்வளவு இருக்கிறதோ அந்த அளவிற்கு தான் அல்லிப்பூ வளரும். நாம் கற்ற நூல்களின் அளவுதான் நமது அறிவு இருக்கும். முற்பிறப்பில் செய்த புண்ணியங்களின் அளவுதான் நாம் இப்போது அனுபவிக்கும் செல்வம். நாம் தோன்றிய குலத்தைப் பொறுத்து தான் நமது குணம் அமையும்.



நூல்: மூதுரை
ஆசிரியர்: ஔவையார்
பாடல்: நஞ்சுடைமை தானறிந்து.... 

பாடல: 24

நஞ்சுடைமை தானறிந்து நாகம் கரந்துறையும்
அஞ்சாப் புறம்கிடக்கும் நீர்ப்பாம்பு - நெஞ்சில்
கரவுடையார் தம்மைக் கரப்பர் கரவார்
கரவிலா நெஞ்சத் தவர்.

விளக்கம்:

தன்னிடம் விஷமிருப்பதை அறிந்து நாகப்பாம்பு மறைந்து வாழும். விஷமில்லாத தண்ணீர்ப் பாம்போ பயமில்லாது எங்கும் வெளியில் திரிந்து கொண்டிருக்கும். அதைப் போலவே நெஞ்சில் குற்றம் உடையவர்களும் அதை மறைத்துத் தானும் மறைந்து வாழ்வர்., குற்றமில்லாதவர்களோ கபடமின்றி வெளியில் திரிந்து கொண்டிருப்பர்.


நாள்: 23.12.2020 இன்பம்:70

நூல்: மூதுரை
ஆசிரியர்: ஔவையார்
பாடல்: மன்னனும் மாசறக் கற்றோனும்......

பாடல்: 25

மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் – மன்னர்க்குத்
தன்தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோற்குச்
சென்றஇடம் எல்லாம் சிறப்பு.

விளக்கம்: 

ஒப்பிட்டு பார்க்கும் போது, அரசனை விடக், கசடறக் கற்றவனே மேலானவன். ஏனென்றால், அரசனுக்கு அவன் தேசத்தைத் தவிர வேறெங்கும் சிறப்பு இல்லை. ஆனால் கற்றவனுக்கோ அவன் செல்லுமிடமில்லாம் சிறப்பு.

நாள்: 24.12.2020 இன்பம்: 71

நூல்: மூதுரை
ஆசிரியர்: ஔவையார்
பாடல்: கல்லாத மாந்தர்க்கு.....

பாடல்: 26

கல்லாத மாந்தர்க்குக் கற்றுணர்ந்தார் சொல்கூற்றம்
அல்லாத மாந்தர்க்கு அறம் கூற்றம் - மெல்லிய
வாழைக்குத் தானீன்ற காய்கூற்றம் கூற்றமே
இல்லிற்கு இசைந்தொழுகாப் பெண்

விளக்கம்:
 
கல்வியறிவில்லாத மூடர்க்குக் கற்றறிந்தவர் கூறும் சொற்கள் துன்பம் தருவதாக இருக்கும். தீயவர்களுக்குத் தர்மம் அழிவை உண்டாக்கும். மென்மையான வாழைக்கு அதில் உருவாகும் குலையே அழிவைத் தரும். ஒரு வீட்டின் பெருமைக்குப் பொருந்தி நடக்காத மனைவி அந்த வீட்டையே அழித்து விடுவாள்.

த.முத்துபாண்டி,
தமிழாசிரியர்,
அரசுமேல்நிலைப்பள்ளி
பூதலாபுரம்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

Comments

Popular posts from this blog

பழங்களின் பெயர்கள் தமிழில்

சித்தர்களின் ரகசிய மந்திரங்கள்

தமிழ் ஆண்டு